தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக அக்கட்சியிலிருந்து கடந்த ஆண்டு இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தவெகவின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இல்லை என அக்கட்சியை எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த வேளையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதேசமயம், தவெக சார்பில் செங்கோட்டையனுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கொடுக்கப்பட்டது தமிழ்நாடு அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையில், தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற கருத்துக்களும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எழ ஆரம்பித்தன. கடந்த புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் மீண்டும், அதிமுகவுக்கே திரும்பி வரத் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசியிருக்கும் அவர், ”தேர்தல் வரட்டும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படட்டும். அப்போது, எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். தவெக-வில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள், அதிமுக-வில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார். அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர்கள் பேசுவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் பேசியிருக்கிறார்.