விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

முதல்வராகப் பதவியேற்கும் விஜய்.. சென்னையில் எல்இடி திரைகள் மூலம் நேரலை!

விஜயின் பதவியேற்பு விழா, சென்னையில் 20 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Prakash J

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக 108 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு விஜய் முதல்வராக இன்று காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றபோதும் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களைத் தாண்டி 120 இடங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேற்று இரவு 4-ஆவது முறையாகச் சந்தித்து, ஆதரவுக் கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

TVK head Vijay

விஜயுடன் பிற கட்சித் தலைவர்களும் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். விஜயின் பதவியேற்பு விழா, சென்னையில் 20 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.