பனையூர் சம்பவம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

விஜய் காரை வழிமறித்த தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி.. பனையூரில் பரபரப்பு! நடந்தது என்ன?

மாவட்டச் செயலாளர் பதவி தராத விரக்தியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், பனையூரில் விஜயின் காரை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மாவட்டச் செயலாளர் பதவி தராத விரக்தியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி ஒருவர், பனையூரில் விஜயின் காரை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நட்

நடிகராக இருந்த விஜய் 2024 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அரசியல் வாதியாக மாறினார். ஆம், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதற்கு ஏற்ப அரசியல் களத்திலும் இறங்கினார். என்னதான் கட்சியை தொடங்கினாலும் மற்ற கட்சிகளை போல் அமைப்பு ரீதியாக பலப்படுத்தாமலே இருந்து வந்தது. பின்னர் மெல்ல மெல்ல அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட முழுமையாக நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தில் ஒட்டுமொத்தமாக 120 மாவட்ட செயலாளர்கள் என விஜய் முதலில் அறிவித்து இருந்தாலும் உட்கட்சி பிரச்சினை காரணமாக ஒரு சில இடங்களில் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றெல்லாம் நியமனங்கள் நடைபெற்றது. இருப்பினும், தூத்துக்குடி, சென்னையில் சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்குமே இதுவரை மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடியை பொறுத்தவரை கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக யார் மாவட்ட செயலாளர் என்ற பிரச்னை நீடித்து வந்தது. கட்சி தொடங்கப்பட்டவுடன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு அஜிதா ஆக்னல் மற்றும் பாலா ஆகிய இருவருக்கும் இடையேயான பிரச்னை கடுமையாக நிலவி வந்தது.

மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்

அதன் பின்னர், படிப்படியாக தூத்துக்குடியில் உள்ள தொழில் அதிபர்கள் ஒவ்வொருத்தராக கட்சியில் இணைந்தனர். அதாவது, ஸ்ரீவைகுண்டத்தின் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த டேவிட் செல்வம், பைனான்சியர் ஜே. கே. ஆர் முருகன், தொழிலதிபர் எஸ்.டி.ஆர் சாமுவேல், வழக்கறிஞரும், முன்னால் அமமுக மாவட்ட செயலாளருமான பிரைட்டர் ஆகியோர் ஒவ்வொருத்தராக கட்சியின் மாவட்டச் செயலாளர் போட்டிக்கு முண்டி அடித்து கொண்டு வந்தனர்.

ஏற்கனவே தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. அதனால் பனையூரில் சற்றே பரபரப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், இன்று தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தார். ஆனால் அவர்கள் அங்குள்ள பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தச் சூழலில், பனையூர் தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்த விஜயின் காரை அஜிதாவும், அவரது ஆதரவாளர்களும் மறித்தனர். விஜயின் காரை, தவெக நிர்வாகியே முற்றுகையிட்டதால் பனையூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அஜிதாவையும் அவரது ஆதரவாளர்களையும் பவுன்சர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அமைப்புகளை முழுமையாக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய அதிருப்தி நிகழ்வுகள் கட்சியின் உள் நிர்வாகத்தை கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், "பதவி கொடுக்கும்போது அதிருப்தி வருவது இயல்புதான், விஜய் அனைவரையும் அரவணைப்பார் திமுகவை போல தவெகவில் குறுநில மன்னர்கள் இல்லை; திமுகவைவிட தவெகவில் ஜனநாயகம் உள்ளது” என்றார்.