2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சியில் இன்று தொடங்குகிறார்.
வெற்றிப் பேரணியில் ’தமிழ்நாடு, உங்க விஜய்... நா வாரேன்...’ என்ற பெயரில் விஜய் மேற்கொள்ளும் பரப்புரைக்கான இலச்சினையை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. பரப்புரைக்காக சென்னையில் இருந்து திருச்சி வரும் விஜய், காலை 10.30 மணியளவில் மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். திருச்சியைத் தொடர்ந்து அரியலூர் செல்லும் விஜய், பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை பகுதியில் பிற்பகல் ஒரு மணியளவில் பரப்புரையில் ஈடுபடுகிறார். விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 21 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்பின்னர், குன்னத்தில் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்துகிறார். அங்கிருந்து பெரம்பலூர் செல்லும் விஜய், மேற்கு வானொலி திடல் பகுதியில் மாலை 5.30 மணியளவில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
விஜய் பரப்புரையைக் காண ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால், அந்தந்த மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன், போக்குவரத்து மாற்றங்களையும் செய்துள்ளனர். மேலும் விஜயின் பரப்புரைக்கான பல்வேறு நிபந்தனைகளையும் காவல் துறையினர் விதித்துள்ளனர். நிபந்தனைகளை மீறினால், விஜயின் பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல் துறையினருக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் தேர்தல் பரப்புரையால் தவெகவினர் உற்சாகம் அடைந்திருந்தாலும், நிகழ்ச்சிகளின்போது விதிமீறல் ஏற்பட்டால் என்னென்ன வழக்குகள், யார் மீது பாயும் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனினும் தேர்தல் பரப்புரையின் எவ்வாறு செயல்பட வேண்டுமென்ற அறிவுறுத்தல்களையும் தவெகவினருக்கு கட்சி தலைமை கொடுத்துள்ளது.