பாஜகவுடன் கூட்டணியா?... தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு முகநூல்
தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணியா?...அமித்ஷா பேச்சு குறித்து தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அதிமுக - பாஜக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தநிலையில், விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்போம் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இதற்கு தவெக தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அதிமுக - பாஜக கூட்டணி வென்றால் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தநிலையில், விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்போம் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இதற்கு தவெக தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியாக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதிலிருந்தே, அக்கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையுமா என்பதே, தமிழ்நாட்டில் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகிறது. இதுதொடர்பான விவாதங்கள் தொடங்கியது முதலே, கூட்டணி ஆட்சி இல்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து வந்தார்.

ஆனால், அண்மையில் தமிழ் நாளிதழுக்கு பேட்டியளித்த அமித்ஷா, தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கேற்போம் என உறுதிபட தெரிவித்தார். இதுதொடர்பாக அதிமுகவை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக தனிப்பெருங்கட்சியாக ஆட்சியமைக்கும் என பேசினார்.இது கூட்டணி ஆட்சி இல்லை என அமித்ஷாவிற்கு அவர் கூறும் பதிலாக கருதப்பட்டது. இந்தசூழலில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அமித்ஷாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணி வென்றால் ஆட்சியில் பங்கு பெறுவீர்களா?

ஆம். ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு, வாரிசு அரசியலால் தமிழக மக்கள் சலிப்படைந்துவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும் .

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க முயற்சிப்போம் எனவும் அவர் நாளிதழுக்கு சூசகமாக பேட்டியளித்துள்ளார்.

விஜய், பாமக மற்றும் சிறிய கட்சிகள் உங்கள் கூட்டணியில் இணையுமா? 

அதனை தற்போது கூற முடியாது. அனைத்து கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிப்போம்.

இந்தநிலையில், இதற்கு தவெக தரப்பில் முற்றிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித் ஷாவின் பதில் மற்ற கட்சிகளுக்கே பொருந்தும். தவெக தலைமையில்தான் கூட்டணி . விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதி. பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை . என்று தவெக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர், ராஜ்மோகன் தெரிவிக்கையில், “ தேசத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு தமிழகத்தில் பாஜகவை பாதுகாக்க அமித்ஷா போராடுகிறார். பாஜகவின் திட்டம் தவெகவிடம் செல்லுபடியாகாது. பாஜகவை கொள்ளை எதிரியாக வைத்து தொடங்கப்பட்ட ஒரே எதிரி தவெக. அதில் எள்ளவும் மாற்றம் இல்லை. மண்ணின் மைந்தவர்களாக இருக்க கூடிய இஸ்லாமிய சகோதர்களுக்கு வஞ்சகம் செய்யக்கூடிய கட்சியோடு நாங்கள் எப்படி கூட்டணி வைப்பது. ” என்று தெரிவித்துள்ளார்.