செப்டம்பர் மாதம் 27 தேதி கரூர் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இதனையடுத்து, தவெகவின் தேர்தல் பரப்புரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று டிசம்பர் மாதம் 4-ம் தேதி சேலத்தில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டு, சேலம் மத்திய மாவட்ட தவெக செயலாளர் பார்த்திபன் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்திருந்தார். மேலும், சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம் மற்றும் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் திடல் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டது.
இதற்கிடையே டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். எனவே, டிசம்பர் 4 ஆம் தேதி விஜய் பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு வழங்க இயலாத நிலை ஏற்படும் என்பதால் மாற்று தேதியை குறிப்பிட்டு கொடுக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.