‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை விகடன் பிரசுரம் மற்றும் விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த நூலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா உட்பட 36 பேர் பங்காற்றியுள்ளனர்.
இந்த நூலின் வெளியீட்டு விழா, இன்று (டிச.6) சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்திற்கு வந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார். தவிர, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மேடையேறிய த.வெ.க. தலைவர் விஜய் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை வெளியிட, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும், மூன்றாம் பிரதியை ஆதவ் அர்ஜூனாவும், நான்காம் பிரதியை விகடன் குழுமத் தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “பட்டியலினத்தை சாராத ஒருவர், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அண்ணன் திருமாவளவனின் கனவு. அது இந்த மேடையில் நனவாகியுள்ளது. புத்தகத்தை சகோதரர் விஜய் வெளியிடுகிறார்” என்று கூறியிருந்தது, தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.