விஜய் மக்கள் இயக்கம் - ‘தமிழக வெற்றி கழகம்’
விஜய் மக்கள் இயக்கம் - ‘தமிழக வெற்றி கழகம்’ புதிய தலைமுறை
தமிழ்நாடு

" விஜய் அண்ணனின் நோக்கம் இதுதான்"- தமிழக வெற்றி கழக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி பிரத்யேக பேட்டி

Jayashree A

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை இன்று தொடங்கி இருக்கிறார் நடிகர் விஜய். “அரசியல் என்பது புனிதமான பணி; தொழில் அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை” என அறிவித்து இருக்கிறார் அவர்.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு கட்சியின் கொள்கை, கொடி, சின்னம் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை விஜய்யே அறிவிப்பார் என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஒப்புக்கொண்ட படத்தை முடித்துக்கொண்ட பின்னர் முழுமையாக சினிமாவை விட்டு விலகி, முழு நேர அரசியல் பணியை மேற்கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளார் விஜய்.

“ஒரு பக்கம் ஊழல் படிந்த அரசாங்கம்... மறுபக்கம் சாதி மத பிரிவினைவாத அரசாங்கம். இவை இல்லாத ஒரு புனிதமான அரசியல் பணியை செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன்” என விஜய் அறிக்கை வழியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி நம்மிடையே பேசும்போது,

லயோலா மணி

“சமத்துவ அரசியல் பயணத்தை முன்னெடுத்து இருக்கின்ற அண்ணன் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக வெற்றி கழகம் என்பது தமிழ்நாட்டு மக்களின் சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சமரசம் இல்லாமல் குரல் கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஒரு நேர்மையான அரசியல் உருவாக வேண்டும். அதுதான் தளபதி விஜய் அண்ணன் அவர்களின் நோக்கமாக உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில்தான் தமிழக வெற்றி கழகமானது போட்டியிட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றது. ஆகவே இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் உள்ளத்தில் தமிழக வெற்றி கழகம் இடம் பெற வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது” என்று கூறினார்.