tvk vijay pt web
தமிழ்நாடு

தவெக ஓராண்டு நிறைவு விழா.. பாஸ் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி.. மேலதிக விபரங்கள் என்ன?

தமிழக வெற்றிக்கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததன் விழா, மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பாஸ் இருப்பவர்கள் மட்டுமே இந்த விழாவுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

2024 பிப்ரவரி மாதம் 2 ஆம்தேதி, நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரிலான கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது தவெக. தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று கூறி கட்சி தொடங்கியுள்ள விஜய், அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்துள்ளார். இதில் 95 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

தவெக தலைவர் விஜய்

இந்நிலையில், கட்சி தொடங்கியதன் ஓராண்டு நிறைவு விழா, வரும் 26 ஆம்தேதி, மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது, இதற்கான ஏற்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாஸ் இருக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் 2500 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதாலும் அதிக அளவில் கூட்டம் கூடினால் நெரிசல் ஏற்படும் என்பதால் கட்சி சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20 பாஸ் வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. மாவட்ட பொறுப்பில் உள்ள 5 நபர்களோடு ஒன்றிய மற்றும் வட்ட அளவில் உள்ள 15 நிர்வாகிகள் என மாவட்டத்திற்கு 20 நபர்கள் வீதம் அழைத்து வர வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்

படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக உள்ள விஜய், இன்னும் 2 மாதங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தங்கள் இலக்கு என்று கூறிய விஜய், முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் நிர்வாகிகள் மத்தியில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.