கந்துவட்டி கொடுமையால் உயிரைவிட்ட தவெக உறுப்பினர் pt
தமிழ்நாடு

”விஜய் அண்ணா; உங்களை நம்பித்தான்” கந்துவட்டி கொடுமையால் உயிரைவிட்ட தவெக உறுப்பினர்! உருக்கமான கடிதம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தவெக தலைவர் விஜய்க்கு நெஞ்சை உருக்கும் வகையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவெக உறுப்பினர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

புதுச்சேரி நெல்லிதோப்பு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விக்ரம் என்கிற விக்ரமன் (34), இவருக்கு திருமணமாகி மேரி என்ற மனைவியும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். டாட்டா ஏசி சரக்கு வாகன டிரைவராக வேலை பார்த்து வரும் விக்ரமன், நெல்லித்தோப்பு தொகுதி தமிழக வெற்றி கழக உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஏற்கனவே கடன் தொல்லையால் கோவிந்த சாலையில் உள்ள தனது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு பிள்ளையார் கோவில் வீதிக்கு வாடகைக்கு குடியேறியுள்ளார்.

தற்கொலை - மாதிரிப் படம்

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த விக்ரமன் வீட்டில் யாரும் இல்லாததால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற அவரது மனைவி மேரி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது விக்ரமன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்ரமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கந்துவட்டி கொடுமையால் நேர்ந்த சோகம்..

இந்நிலையில் விக்ரமன் தற்கொலை செய்வதற்கு முன் மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார். அதில் தமிழக வெற்றி கழக உறுப்பினர் அட்டையுடன் மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு எழுதி வைத்த கடிதத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனசேகர் என்பவரிடம் 3 லட்சத்து 80 ஆயிரம் வரை 10 பைசா வீதம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும் மாதம்தோறும் சரியாக பணத்தைக் கட்டி வந்த நிலையில், விபத்து ஏற்பட்டதால் வட்டி கட்ட முடியாமல் போனது. அதனால் மூன்று மாதங்கள் தேதி தவறி கட்டியதாகவும் இதனால் வட்டிக்கு பணம் கொடுத்த தனசேகரன், விக்ரமன் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பற்றி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கந்துவட்டி கொடுமை - தவெக உறுப்பினர்

மேலும் புதுச்சேரி பிப்டிக் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் செல்வத்திடம் 50 ஆயிரம் பணம் வாங்கியதாகவும் அதற்கு 21,000 வட்டியுடன் சேர்த்து அசலை கொடுத்தால், மீண்டும் 1லட்சத்து 50 ஆயிரம் பணம் தருவதாக செல்வம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய விக்ரமன் தான் ஓட்டி வந்த டாட்டா ஏசி வாகனத்தை அடமானம் வைத்து பணத்தை செல்வத்திடம் தந்துள்ளார். ஆனால் அதன் பிறகு செல்வம், விக்ரமனின் தொலைபேசியை எடுக்கவில்லை இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், வீட்டில் நிம்மதியின்றி இருந்ததாக கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கும் கடிதம் ஒன்றை எழுதிய விக்ரமன், ”அதில் விஜய் அண்ணா, என்னோட கடைசி ஆசை இதுபோன்ற 10 மற்றும் 15 சதவீதம் வட்டிக்கு கொடுத்து சித்திரவதை செய்யும் அனைவரும் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் ஆட்சியில் இந்த மாதிரி வட்டிக்கு விடுபவர்கள் பயப்பட வேண்டும் அண்ணா! தயவுசெய்து என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஏதேனும் படிப்புக்கும், வாழ்க்கைக்கும் பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனது மகள் மிகவும் நன்றாக படிப்பார் படிக்க வையுங்கள் அண்ணா ப்ளீஸ். உங்களை நம்பித்தான் உயிரை விடுகிறேன்" ப்ளீஸ் ஹெல்ப் மை ஃபேமிலி" என குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு கடிதம்

மேலும் இறந்த பின் தனது உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்திற்கு பண உதவி செய்யுங்கள் என கேட்டுக் கொண்டதோடு அரசும் கந்துவட்டி விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல

கந்து வட்டி கொடுமையால் இரு பெண் பிள்ளைகளை விட்டு விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.