மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் டாஸ்மாக் கடையில் குவிந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் ஒருவாரம் முன்பிலிருந்தே தீவிரமாக நடந்து வரும் நிலையில், தவெக தொண்டர்கள் நேற்றிலிருந்தே மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரத்தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று அவர்கள் வரும் வழியில் உள்ள ஆவியூர் டாஸ்மாக்கில், தவெகவின் தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் இன்று தவெகவின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறும் நிலையில், அதன் அருகே உள்ள திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, தூம்பங்குளம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, வளையங்குளம், திருமங்கலம்-உசிலம்பட்டி சந்திப்பு, ஆலம்பட்டி, மொட்டமலை, தோப்பூர், கூத்தியார்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 14 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை மாநாடு நடைபெறும் நாளில் மூட மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்..
ஆனால், அறிவித்தத சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து, இன்று பாரபத்தி பகுதிகளிலும் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.