தவெக விஜய் pt
தமிழ்நாடு

’பாரதியாரா.. பாரதிதாசனா..?’ தவறுதலாக பெயரை மாற்றிச் சொன்ன விஜய்! என்ன நடந்தது? விரிவாக அறிய!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் இன்று 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பேசியதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இறுதியாக உரையாற்றினார். அவரது உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிட்டு கடுமையான விமர்சனம் செய்தார். விஜய்யின் பேச்சுக்கு நிர்வாகிகள் கரகோஷம் எழுப்பி தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர். விஜய் தனது உரையை முடிக்கும்போது ஆங்கில வரிகளை மேற்கோள் காட்டி பேசியதோடு, திருக்குறள் ஒன்றையும் சொல்லி முடித்தார். இதுதான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பரபரப்பாக பேசிய விஜய்.. ஆனால்!

Men may come and men may go but I go on forever’ என்ற william blake எழுதிய கவிதையோடு தனது உரையை முடிப்பதாக விஜய் குறிப்பிட்டார். ஆனால் இந்த வரிகள் william blake எழுதியது இல்லை.  Alfred Lord Tennyson என்பவர்தான் இந்த வரிகளை எழுதியுள்ளார். தவறுதலாக விஜய் பெயரை மாற்றி கூறியுள்ளார். மனிதர்கள் வருவார்கள் போவார்கள், நான் என்றென்றும் இருப்பேன் என்ற பொருளோடு வரும் இந்த வரிகளை தனது அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு விஜய் பேசினார்.

அரசியலில் மக்களுக்காக நான் என்றென்றும் இருப்பேன். வந்தேன் போனேன் என்றில்லாமல் எப்போதும் அவர்களின் நலனுக்காக குரல் கொடுப்பேன். அடுத்த தேர்தலில் இதுவரை மக்கள் சந்திக்காத பல வரலாற்று மாற்றங்களை தனது கட்சி ஏற்படுத்தும் என்ற உறுதியோடு இருப்பதாகவும் விஜய் தெரிவித்தார்.

கவிதை எழுதியவர் பெயரை தவறுதலாக மாற்றிக் குறிப்பிட்ட தவெக தலைவர் விஜய்!

அதனை தொடர்ந்து,

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாய் செயின் - குறள் 484

என்ற திருக்குறளையும் குறிப்பிட்டு தனது உரையை விஜய் நிறைவு செய்தார்.

ஒரு செயலைச் செய்யத் தேவையான காலம், இடம் ஆகிய இரண்டையும் கருதிச் செயல்பட்டால், எத்தகைய பெரிய காரியத்தை செய்தாலும் அது கை கூடும் என்பதே இதன் பொருளாகும். இதையும் தனது அரசியல் பயணத்தை மனதில் வைத்தே விஜய் பேசியுள்ளார்