mgr, madurai, vijay x page
தமிழ்நாடு

MGR பாணி.. மதுரை மண்டலத்தில் போட்டியிடுகிறாரா தவெக தலைவர் விஜய்? பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கில் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அத்தொகுதியில் களமிறங்கவுள்ளாரா எனும் கேள்வி எழுந்துள்ளது

PT WEB

செய்தியாளர் - மணிகண்டன் பிரபு

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கில் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அத்தொகுதியில் களமிறங்கவுள்ளாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. இது எம்ஜிஆர் வென்ற தொகுதி என்பதால் அதிமுக கோட்டைக்கு விஜய் குறி வைக்கிறாரா எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தவெக விஜய்

2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து மாநாடு முதல் பூத் கமிட்டி கூட்டங்கள் வரையில் நடத்திவரும் விஜய், அடுத்ததாக எந்தெந்த தொகுதிகள் தங்கள் கட்சிக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்கிற தரவுகளையும் சேகரிக்கத் தொடங்கிவிட்டார். கூடவே, தனக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் சிலவற்றையும் விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி விஜயின் விருப்பப்பட்டியலில் மதுரை மண்டலம் முக்கிய இடம்பிடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், மதுரை மேற்குத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து விஜயை தமிழக முதல்வராக்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் ஒட்டிய போஸ்டர்தான் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் பிறந்து வளர்ந்தது சென்னையாக இருந்தாலும், அவரது பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே இருக்கும் முத்துப்பேட்டை. ரசிகர் மன்றங்கள் மட்டுமின்றி, அவரது கட்சியும் வலுவாக இருக்கும் பகுதியாகத் திகழ்கிறது மதுரை மண்டலம். சமீபத்தில் ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றபோது, விமான நிலையத்தில் திரண்ட கூட்டமே அதற்கு சாட்சி எனக்கூறுகின்றனர், தவெகவினர்.

தமிழக வெற்றிக் கழக தொடக்க மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்தாலும், அதன் பிரதான கிளை மதுரையில் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார். இப்படி மதுரை மீதான விஜய்யின் பாசத்தை சுட்டிக்காட்டும் தவெகவினர், தேர்தலில் போட்டியிட அவர் மதுரையை விரும்புவதற்கான முக்கியக் காரணம் எம்ஜிஆர்தான் என்கிறார்கள். எம்ஜிஆர் முதன்முதலில் போட்டியிட்டது சென்னை பரங்கிமலையாக இருந்தாலும், தமிழ்நாட்டின் முதல்வரான பிறகு அவர் எதிர்கொண்ட முக்கியமான தேர்தலுக்குத் தனக்காக தேர்வு செய்தது மதுரை மேற்கு தொகுதியைத்தான். எம்ஜிஆரை கொள்கைத் தலைவராக அறிவிக்காவிட்டாலும், அவர்களைப் புகழ்ந்து பேசுவதன் மூலம் அதிமுக தொண்டர்களை கவர்ந்திழுப்பதை ஒரு உத்தியாகவே விஜய் பார்ப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் பிரவேசத்தின் முன்னோடியாக, விஜய் முதன் முதலில் மக்கள் மத்தியில் தோன்றிய இடமும் மதுரைதான். இத்தனை தகவல்கள் வந்தாலும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என தேர்வு செய்து அறிவிப்பது விஜய் மட்டுமே என தவெக தலைமைக் கழகம் கூறியுள்ளது. பொதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் எந்தக் கட்சி அதிக இடங்களில் வெல்கிறதோ, அந்தக் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்பது அரை நூற்றாண்டுக்கும் மேலாக உலவும் கதை. அதை மனதில் வைத்தும் விஜயை மதுரையில் களமிறக்க திட்டமிடுகிறாரா என்ற கேள்வி தமிழக வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ளது.