தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய விஜய் விரைவில் மாவட்டம் முழுதும் தேர்தல் பரப்புரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு, உங்க விஜய்... நா வாரேன்...’ என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பரப்புரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் தவெகதலைவர் விஜய்.
திருச்சியில் பேசி முடித்தபிறகு அரியலூர் சென்ற தவெக தலைவர் விஜய், அரியலூர் மண்ணில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கேள்விகளை முன்வைத்தார்.
அரியலூர் மண் குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் முதல் வரிசையில் காலம் காலமாக இருக்கிறது அரியலூர். இங்குள்ள சிமெண்ட், முந்திரி, பட்டாசு உற்பத்திகளை மேம்படுத்த இந்த அரசு நினைப்பதில்லை.
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை முறையாக அரசு பராமரிக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபம் அமைக்காதது ஏன்? மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி கண்டுகொள்ளாதது ஏன்? ரயில் வசதி கோரிக்கைகளும்கூட என்ன ஆனதென தெரியவில்லை.
அரியலூரை சேர்ந்த ஒருவர் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோதும், இந்த மாவட்டத்துக்கு போதிய அளவு பேருந்து வசதி இன்றுவரை இல்லாதது ஏன்? என பரப்புரையின் போது அமைச்சர் சிவசங்கருக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு பேசுறியே நீ வந்து என்ன பண்ணபோறனு தான கேட்குறீங்க? தீர்வை நோக்கி செல்வதும், தீர்வை காண்பதுமே தவெக-வின் லட்சியம். எங்கள் தேர்தல் அறிக்கையில் இதற்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வோம். அதற்கு முன் பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதைமட்டுமே சொல்வோம்.
தவெகவின் நிலைப்பாட்டை பொறுத்தவரை, மருத்துவம் - குடிநீர் - ரேஷன் - கல்வி - சாலைவசதி - பெண்கள் பாதுகாப்பு - சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் தவெக ஒருபோதும் காம்ப்ரமைஸ் செய்யாது. ஏழ்மை, வறுமை, ஊழல், குடும்ப ஆதிக்கம் இல்லாத மற்றும் உண்மையான, மனசாட்சி உள்ள மக்களாட்சியே நம் லட்சியம்” என மக்கள் ஆரவாரத்திற்கிடையே பேசினார்.