தவெக தலைவர் விஜய் தனது முதல் பரப்புரையை பெரிதும் எதிர்பார்ப்புக்கிடையில் முடித்திருக்கும் நிலையில், நேற்று முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடித்தத்திற்கு தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார்.
திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”பழைய கட்சி புதிய கட்சி என எந்த கட்சியாலும் கொள்கை உறுதி கொண்ட திமுக-வின் எஃகு கோட்டையை யாராலும் உடைக்க முடியாது” என கூறி தவெக-வை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு, ஏற்கனவே பதிலளித்திருந்த தவெக துணைப்பொதுச்செயலாளர் ராஜ்மோகன் எஃகு கோட்டையோ, இரும்புக் கோட்டையோ, மலைக் கோட்டையோ.. அந்தக் கோட்டையில் ஓட்டை போடுவதில் எங்கள் தலைவர் விஜய் ஸ்பெஷலிஸ்ட் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் விஜய் தெரிவித்துள்ளதாவது, “ நமது மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன் என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்கள்.
'விஜய் வெளியே வரவே மாட்டான்’ மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. யார் எத்தனைக்கூப்பாடு போட்டாலும், எப்படி கதறினாலும், நாம் முன்னேறிச்செல்வோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, பெரம்பலூர் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், “வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்” என்று கூறியிருந்தார்.