செய்தியாளர் - பிரேம்குமார்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், அண்ணாவின் கொள்கைகளை மறந்துவிட்ட திமுகவை கடுமையாக விமர்சித்தார். தற்குறிகள் என கூறப்படுவம் இவர்கள் தான் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறிகள் எனக் கூறி, தற்குறிகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இன்று, தவெக தலைவர் விஜயின் ”மக்கள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேற்று காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்து இந்நிகழ்வுக்கான அனுமதி சீட்டினை அளித்திருந்தார்.
இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் தவெக தலைவர் விஜயின் ”மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி” தொடங்கியது. தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டிற்காக உழைப்பதற்காக அண்ணா பிறந்தார் எம்.ஜி.ஆர் பாடலை பாடி, காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாவை நினைவு கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து, ”காஞ்சிபுரத்திற்கும் எனக்கும் தன்னிச்சையாகவே ஒரு இணைப்பு இருக்கிறது. நான் கட்சி தொடங்கியப் பின் முதல் களப் பயணம் பரந்தூரில் இருந்து தான் தொடங்கியது. இன்றும் ஒரு மனவேதனைக்குப் பிறகு காஞ்சிபுரம் தான்” என்று கூறினார்.
”அண்ணா தொடங்கிய கட்சியை இன்று என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? கேள்வி கேட்பதை நிறுத்தப் போவதும் இல்லை. நாங்கள் அண்ணா கூறிய ”மக்களிடம் செல்” என்ற கொள்கையைப் பின்பற்றி பயணிக்கிறோம். ஆனால், அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். திமுகவை சார்ந்தவர்கள் நம்மை கொள்கை இல்லாதவர்கள் என்று கூறுகிறார்கள் ஆனால், அவர்கள் கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
நாம் அவர்களின் தவறுகளை எடுத்துப் பேசுவதால் சட்டப்பேரவை முதல் சாதரண நிகழ்ச்சிகள் வரை தவெகவின் மீது அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள். நாம் நிச்சயமாக ஆட்சிக்கு வருவோம். மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வரவேற்பார்கள். நம் கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டு வந்திருக்கிறோம். அதில், எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
வாக்களிக்கும் மக்களை தொடர்ந்து, தற்குறிகள் எனக் கூறிவருகிறார்கள். நாம் தற்குறி என்றால்; இவ்வளவு வருடங்கள் நம்மிடம் ஓட்டு வாங்கிய அவர்கள் யார்?. தற்குறிகள் என்று சொல்லும் இவர்கள் தான் உங்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இருக்கிறவர்கள். இவர்கள் தற்குறிகள் கிடையாது தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறி. சும்மா லாஜிக்கே இல்லாமல் தற்குறி தற்குறி என்று கூறி கொண்டிருக்கிறார்கள்” எனப் பேசினார்.