பூத் கமிட்டி மாநாடு முகநூல்
தமிழ்நாடு

கோவையில் தொடங்கி 5 மண்டலங்களில் பூத்கமிட்டி மாநாடு To விஜயின் சுற்றுப்பயணம்! தவெகவின் பக்கா பிளான்!

தமிழகத்தில் 5 மண்டலங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

நேற்றைய தினம் (11.4.2025) பனையூரில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

5  மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு!

அதன்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாநாக அல்லாமல் தமிழ்நாட்டின் 5 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தவெக முடிவு செய்திருக்கிறது. கோயம்புத்தூரில் முதல் பூத் கமிட்டி பயிற்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் தேவையான ஏற்பாடுகளை தொடங்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், டெல்டா மண்டலம் தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், பூத் கமிட்டி மாநாட்டில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் பொதுமக்களுக்கு தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தலைமை தகவல் அளித்துள்ளது.

விஜய் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு!

மேலும், விஜய் சுற்று பயணத்திற்கு தேவையான திட்டங்களை மாவட்ட செயலாளர்கள் ஒரு மாதத்தில் தயார் செய்யவும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களில் சுற்று பயணத்தை எங்கு தொடங்குவது, எங்கு பொதுக்கூட்டம் நடத்துவது ,மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள்,மாவட்டங்களில் சுற்று பயணத்திற்கான திட்டம் என அனைத்தையும் தயார் நிலையில் மாவட்ட செயலாளர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.