தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறார். கட்சி தொடங்கப்பட்டு, கட்சிக் கொடி, கொடி பாடல், மாநாடு, செயற்குழு கூட்டம் என்று கடந்த ஆண்டு செயல்பாடுகள் அமைந்தன. இந்த ஆண்டு துவங்கிய வாக்கிலேயே விஜய்யின் பரந்தூர் விசிட் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஒரு வாரத்திற்கும் மேலாக தனது பனையூர் அலுவலகத்தில் முகாமிட்ட விஜய், மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.
234 தொகுதிகளை கட்சியின் வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்த விஜய், அதற்கான மாவட்டச் செயலாளர்களை தானே நேர்காணல் செய்து நியமித்தார். இதுவரை 95 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேசி இருக்கிறார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்து, தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை வாங்கிய ஆதவ் அர்ஜுன், இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். அதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவரது அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் இந்த ஆலோசனையில் உடன் இருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியபிறகு, பிரஷாந்த் கிஷோரே விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அக்டோபரில் நடந்த மாநாட்டிற்கு முன்பே நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், சந்திப்பு இப்போது நடைபெற்றுள்ளது. தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துள்ள பிரஷாந்த் கிஷோர், 2021ம் ஆண்டுக்குப் பிறகு நேரடியாக யாருக்கும் தேர்தல் வேலை செய்யவில்லை. 2022ம் ஆண்டு புதிதாக கட்சி தொடங்கி, களமாடி வருகிறார்.
இந்த நிலையில்தான், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களமாடி வரும் விஜய்யை அவரது வீட்டில் வைத்து சந்தித்துள்ளார். ஏற்கனவே, விஜய்க்கு பலமாக ஆதவ் அர்ஜுனா உடன் நிற்கும் நிலையில், பிரஷாந்த் கிஷோர் கைகோர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், அதற்கான வியூகம் உள்ளிட்டவற்றை முன்னிருத்தியே விஜய் - பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு அமைந்திருப்பதாக தெரிகிறது. அடுத்த மாதத்தில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் என்று அக்கட்சி தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது.