செய்தியாளர்: இஸ்மாயில்
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக கடந்த 908 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை ஏகனாபுரம் கிராமத்தில் சந்திக்க உள்ளார்.
இதற்காக அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் திடல் சீரமைக்கப்பட்ட நிலையில், திடீர் மழை காரணமாக திடல் முழுவதும் நீர் சூழ்ந்தது.
இந்நிலையில் தொடர் வானிலை காரணமாக நாளை விஜய் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வு அதிகப்படியான பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சூழலில் எஸ்பி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளர் சுந்தர்ராஜ் இடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், “தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி ஒருபோதும் நடைபெறாது, பொதுமக்கள் கூடும் அம்பேத்கர் திடலில் மட்டுமே நிகழ்வு நடைபெறும். தலைவர் விஜய் கேரவன் வாகனத்தில் வந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார்” என தெரிவித்தார்.
நண்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்குள் இந்த நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், மீண்டும் எஸ்பி சண்முகத்தை சந்தித்த பின் இறுதியாக அனைத்து நிகழ்வுகளும் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.