தவெக தலைவர் விஜய் பரப்புரை pt web
தமிழ்நாடு

அரியலூர் பரப்புரை| “என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பாத்தாச்சு..” - தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் இன்றுமுதல் தன்னுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கினார். திருச்சியில் தொடங்கிய அவருடைய பரப்புரை, அரியலூரில் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய விஜய் விரைவில் மாவட்டம் முழுதும் தேர்தல் பரப்புரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

அந்தவகையில் 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு, உங்க விஜய்... நா வாரேன்...’ என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பரப்புரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

தவெக மதுரை மாநாடு விஜய்

அதன்படி செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் தவெகதலைவர் விஜய்.

திருச்சி பரப்புரையின் ஹைலைட்ஸ்..

திருச்சியில் முதல் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், திமுகவின் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, அவர்கள் பாணியிலேயே, சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

திருச்சி மரக்கடை பகுதியில் பேசிய விஜய், மகளிர் உரிமைத் தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை எனவும், பெண்களுக்கு இலவச பேருந்தை விட்டு, ஓசி ஓசி என சொல்லிக்காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள் என்ன ஆனது என்றும் விஜய் கேள்வி எழுப்பினார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி பரப்புரை

நீட் தேர்வை ரத்துசெய்வோம்... கல்விக் கடனை ரத்துசெய்வோம் என சொன்னீர்களே... செய்தீர்களா... என திமுகவின் பல்வேறு வாக்குறுதிகளை குறிப்பிட்டு விஜய் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமில்லாமல் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செய்யப்படவில்லையே ஏன் என்றும் பட்டியலை வெளியிட்டு கேள்வி எழுப்பினார். அத்துடன் திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பாத்தாச்சு..

திருச்சி பரப்புரையை முடித்துவிட்டு அரியலூர் சென்ற தவெக தலைவர் விஜய், திருச்சியில் மைக் பிரச்னை இருந்ததால் அங்கு பேசிய ஒரு விஷயத்தை மீண்டும் சொல்ல நினைக்கிறேன். அந்த காலத்தில் போருக்கு முன் குலதெய்வ கோயிலுக்கு செல்வது வழக்கம். அப்படி அடுத்த வருடம் நடக்க உள்ள ‘ஜனநாயக’ போருக்கு முன், மக்களாகிய உங்களை பார்த்து செல்ல வந்திருக்கிறேன்.

உங்களோட இந்த அன்புக்காக, எவ்வளவு பெரிய உயரத்தையும், வசதியையும், வருமானத்தையும் தூக்கி எரிந்து வரலாம். உங்கள் அன்பு, பாசத்தைவிட உலகில் எனக்கு எதுவுமே பெரிது இல்லை. உங்கள் வீட்டில் ஒருவனாக, உறவினனாக என்னை ஆக்கியிருக்கீங்க.

தவெக தலைவர் விஜய் திருச்சி பரப்புரை

“விஜய், விஜய் அண்ணா, விஜி தம்பி, நம்ம விஜி என... என்னடா இந்த விஜி தனி ஆளாக இருப்பான் என பார்த்தால், எப்போதும் மக்கள் கடலோடு இருக்கிறானே’ என்று நம் எதிரிகளுக்கு தெரிந்துவிட்டதால், கண்ணாபின்னா என பேசுகிறார்கள்.

நான் மரியாதையாக பேசினால்கூட தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அறிஞர் அண்ணா சொன்னதுபோல வாழ்க வசவாளர்கள் என சொல்லி சென்றுவிடவேண்டியதுதான்.

தவெக தலைவர் விஜய் திருச்சி பரப்புரை

என்னங்க பெரிய பணம்? போதும் என்ற அளவுக்கு பாத்தாச்சு... அரசியலுக்கு வந்துதான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதற்கு கொஞ்சம் கூட அவசியமில்லை.

எனக்கும் எல்லாத்தையும் எல்லாமும் கொடுத்த உங்களுக்காக உழைப்பதைவிட வேற எந்த எண்ணமும், வேலையும் எனக்கும் இல்லை என்று பேசினார்.