CM Vijay PTI
தமிழ்நாடு

அர்ச்சனா கல்பாத்தி முதல் வேல்முருகன் வரை.. அரசுப் பதவிகளில் சினிமா பிரபலங்கள்!

திரைத்துறையுடன் தொடர்புடைய சிலருக்கு அரசு சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

தமிழகத்தில் உச்ச நடிகராக இருந்து, தற்போது திரைப் பயணத்திலிருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில், பல்வேறு அரசுப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, திரைத்துறையுடன் தொடர்புடைய சிலருக்கு அரசு சார்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ARCHANA KALPATHI

அந்த வகையில், விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணனுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நியமனம் அப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அடுத்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் பெயரும் அரசு நியமனத்தில் இடம்பெற்றுள்ளது. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கொண்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பத்தாரர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த AGS நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால், அவரது நியமனம் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜயைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனும் இதே குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VELMURUGAN

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இதையடுத்து, அறங்காவலர் பதவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்களைத் தேர்வு செய்யும் மாநிலக் குழுவில் திரைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.