தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட்டில், பெண்கள், மாணவிகள், கர்ப்பிணிகள், சுய உதவிக்குழுக்கள், விவசாயப் பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் கவனம் பெற்றுள்ளன. "வெற்றி தமிழகத்தின் தொலைநோக்கு திட்டங்கள்" என்ற கொள்கையின் அடிப்படையில், பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சுமார் இரண்டரை மணி நேரம் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து பார்க்கலாம்.
முதலில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளின் பிறப்பையும் கொண்டாடும் வகையிலும், தாய்மையை கவுரவிக்கும் வகையிலும், "தாய்மாமன் தங்க மோதிரம்" திட்டத்தின் கீழ் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர் குடும்பங்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்கில், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்கு அளித்து, நவீன வேளாண் பயிற்சியுடன் செயல்படுத்தப்படும் "மண்ணின் மகள்" திட்டத்திற்கு ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பை இடைநிறுத்தும் மாணவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், மாணவிகளுக்கான ஊக்கத்தொகை திட்டமும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்க ரூ.1.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் திருமண உதவித் திட்டமாக "அண்ணனின் சீர்" திட்டத்தின் கீழ், 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவதற்காக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் இலவச உணவு, மருத்துவ வசதிகள், தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் உதவி மையங்களை உருவாக்கும் "தாய் கேர்" திட்டத்திற்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் வழங்கும் "வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு" ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊரகப் பெண்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், ஆண்டுதோறும் 10 ஆயிரம் தகுதியான பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் சுய உதவிக்குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மாற்றும் "சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்தின்" கீழ், சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டில் ரூ.38 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், பெண்கள் தலைமையிலான அவசரகால காவல் நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்பு பணிகளுக்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்க ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த பட்ஜெட்டில் பெண்களின் பிறப்பு முதல் கல்வி, திருமணம், தொழில், விவசாயம், வாழ்வாதாரம், தாய்மை மற்றும் பாதுகாப்பு வரை வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை மையமாகக் கொண்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெண்களுக்கு 2,500 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை மற்றும் அணைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர