மின்வெட்டு வன்கொடுமை சம்பவங்களால் சவால் எதிர்கொள்ளும் தவெக அரசு web
தமிழ்நாடு

'குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு..' அடுத்தடுத்த போராட்டங்கள்! என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து நடக்கும் போராட்டங்கள் தவெக அரசுக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

PT WEB

புதிய தவெக ஆட்சிக்கு எதிராக தமிழ்நாட்டில் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக வெடித்து வருகின்றன. தலைநகர் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன; திருத்தணி, ஒத்தப்பட்டி போன்ற இடங்களில் குடிநீர் விநியோகம் இல்லாதது குறித்தும் மக்கள் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனுடன், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது, அரசுக்கு தொடக்கத்திலேயே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைந்து 1 மாதம் கூட நிறைவடையாத நிலையில், மாநிலம் முழுவதும் அரசை கண்டித்து நடக்கும் பல்வேறு போராட்டங்கள் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாக கூறி தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிலும் தலைநகர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவில் மின்வெட்டு - மக்கள் ஆர்ப்பாட்டம்

அதே போல தமிழ்நாட்டில் கோடை காலம் உச்சம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் குடிநீர் வரவில்லை என்று கூறி, 50க்கும் மேற்பட்டார் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஒத்தப்பட்டி கிராமத்தில் குடிநீர் வரவில்லை என்று கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தவிர சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் தவெக அரசுக்கு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகள் தினசரி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சி பொறுப்பேற்று முதல் மாதத்திலேயே இந்த அளவு போராட்டம் நடப்பது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.