தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை தொடங்கியிருக்கும் நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெறும் பகுதியில் தவெக தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். வெயிலால் அடுத்தடுத்து தொண்டர்கள் மயங்கி விழும் நிலையில், வெயிலை தணிக்க ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
அரசியல், பொதுக்கூட்டம், மாநாடு, தேர்தல் என ஜனநாயக நிகழ்வுகள் என எது எடுத்துக்கொண்டாலும் பரபரப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்காது. அதுபோல தவெக மாநாட்டுப் பகுதியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்,
தவெக மாநாட்டிற்கு திருச்சியில் இருந்து சிறியரக மிதிவண்டியில் வந்த நபர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுகுறித்து அந்த நபரிடமே கேட்டபோது, திருச்சியிலிருந்து மாநாட்டுக்கு இந்த சிறிய வண்டியிலேயே வருகிறேன், வருவதற்கு சற்றுக்காடினமாகவே இருந்தது. ஆனால் காவல்துறையினர் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர் என்றும் தெரிவித்தார்.
“புலி புலி புலி...” என விஜய் பட பாடலை பாடிக்கொண்டு தவெக கொடியின் மஞ்சள் சிவப்பு வண்ணங்களில் புலி வேஷமிட்டு நடனமாடி வந்த நபரால் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இது புலிவேசம் போட்ட நபரிடம் கேட்டபோது, கோயம்புத்தூரில் வருவதாகவும் தவெக மாநாட்டிற்காக தான் புலிவேசம் போட்டிருப்பதாகவும், விஜய்க்காக வெறியோடு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மாநாட்டில் ஏற்கனவே கடும்வெயிலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மாநாட்டின் நுழைவாயிலில் வெப்பச்சலனம் காரணமாக குப்பைக்கூழங்களுடன் சூரைக்காற்று வீசியது. இதனால் தொணடார்கள் மேலும் சிரமத்துக்குள்ளாயினர்.
கொளுத்தும் வெயில் காரணமாக நிழலில் அமர்வதற்காக அங்கிருந்த ஒத்த பனமரத்தடியில் தொண்டர்கள் இடம்பிடித்து உட்கார்ந்திருந்தனர். வெயில் சாய சாய நிழலும் மாறிமாறி விழுந்தது. இதனால் தொண்டர்களும் நிழலைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். இது மரத்தின் அவசியத்தை காட்டுவதாக இருந்தது.
வெளியூர்களில் இருந்து வேன்களிலும், பஸ்களிலும் வந்த தொண்டர்கள் பஸ்களின் மேல் ஏறிநடனமாடி வந்தனர். என்ன தான் மாநாடு தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் உடம்பை பார்த்துக் கொள்வதும் உயிரும் முக்கியம் அல்லவா?
இவ்வாறு தவெக மாநாட்டில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைப்பெற்று வருகின்றன.