டெல்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. நேற்று, தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியின்போது, ராகுல்காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்படிருந்தனர்.
இந்தச்சூழலில் தான், இன்று ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் நோக்கி புறப்பட்டனர். ஆனால், அவர்களை டெல்லி போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, சாலையில் அமர்ந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற நிலையில், ராகுல்காந்தி இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான், ராகுல்காந்தியின் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.