ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மறைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "தவெக தலைவர் விஜய் வரும் 18ஆம் தேதி ஈரோடு பெருந்துறையில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். இந்நிகழ்ச்சி 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். பரப்புரை மேற்கொள்வதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டு இருக்கின்றன. பெருந்துறை தொகுதியில் இருந்து பல்வேறு கட்சியினர் தவெகவில் இணையவுள்ளனர். தவெகவிற்கு போட்டியாக யாரையும் சொல்ல முடியாது; தவெக தலைவர் விஜய் மக்கள் சக்தியால் முதல்வர் ஆவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் பரப்புரையை தொடங்க தவெக தாரப்பில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டது. கார்த்திகை தீபத்தையொட்டி தவெக பரப்புரை அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்வதற்கு டிசம்பர்-16 ஆம் தேதி பவளத்தாம்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதி கேட்கப்பட்ட நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையேதான், கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரியில் தவெக விஜயின் பரப்புரை நடத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்ள தவெக தரப்பில் பெருந்துறை அருகே மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பரப்புரைக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. வரும், 18 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் பரப்புரை மேற்கொள்ளவார் என தவெக மாநில நிர்வாகி செங்கோட்டையன் கூறியிருக்கிறார். காவல்துறை சார்பில் அனுமதி கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.