விஜய் Pt web
தமிழ்நாடு

மாமல்லபுரம் | விஜய் தலைமையில் மகளிர் தினவிழா.. பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு!

தவெக சார்பில் நாளை 3 மணியளவில் மகளிர் தினவிழா நடக்கவிருப்பதாகவும் இதில், பெண்களுகான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிடுவார் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Premkumar S

சர்வதேச மகளிர் தினம் நாளை மறுநாள் (மார்ச் 8) கொண்டாடப்படவிருக்கிறது. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நாளை (மார்ச் 7) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறது. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த நிர்வாகிகள் சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளை பகுதிபகுதியாக வெளியிட்டு வருகிறார்.

என். ஆனந்த்

இந்த சூழலில்தான், நாளை நடைபெறவுள்ள மகளிர் தினக் கொண்டாட்ட விழா நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெண்களுகான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயாலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தவெக தலைமை நிலையச் செயலக எக்ஸ் தளப்பதிவில், ”சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் கழகத் தலைவர் அறிவிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.

அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.