கரூர் தவெக பரப்புரையின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர்.
இதனால் ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து கரூர் மருத்துவமனையை நோக்கி விரைந்தபடியே இருந்தன. இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 33 பேர் தற்போது உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மேலும் உயரக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பிரேதப் பரிசோதனை அறைக்கு உயிரிழந்தோரின் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இதனால், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் காண்போரை மேலும் கண்ணீர் சிந்த வைக்கின்றன. இந்த துயர நிகழ்வால் கரூரே சோகத்தில் மிதக்கிறது; கண்ணீரில் நனைகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல் ஆட்சியர்கள் கரூருக்குச் செல்ல தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் திருச்சி, கோவையில் இருந்து தேவையான மருத்துவர்கள் கரூருக்குச் செல்லவும், மருத்துவத் துறைச் செயலாளர் நேரில் செல்லவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், ”கரூரில் நடந்த அரசியில் பேரணியில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அன்புக்கினியர்வர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வேண்டுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கரூரில் நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வலியை கொடுத்திருக்கிறது. இந்தப் பிள்ளைகளுக்கு நமது கண்ணீர் வணக்கம். அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ”விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோருக்கும் கட்டணமில்லாச் சிகிச்சை வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.