1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டுவோம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த செப். 20ஆம் தேதி மேற்கொண்டார். அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து, அவர் உரையாற்றினார். இதனிடையே, நாகையில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக கூறி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோன்று, திருவாரூரிலும் தவெகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர் பரப்புரையை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவியதற்காக அந்தந்த மாவட்ட தவெகவினருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விஜய், தவெக பற்றி பொய்யான கதைகளை பரப்புவோர் ஒவ்வொரு நாளும் மக்களிடையே பெருகும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியாக இருக்கும் தவெக, அந்த மக்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். குறிப்பாக 1967, 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.