தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். ஜனநாயகன் பட தணிக்கை விவகாரத்தில் கூட அவர், எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இன்று, தவெக தலைவர் விஜய் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட விவகாரம் ஆகிய பிரச்னைகளுக்கு மத்தியில் விஜய் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், 1 மாதத்திற்கு பிறகு அரசியல் சார்ந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் இக்கூட்டம் இருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் அரசியல் நிகழ்வில் பங்கேற்றுகிறார். தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜயை செயல்வீரர்கள் கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் விசிலடித்து வரவேற்றனர்.
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் தொடக்கத்தில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில், முதலாவதாக தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார். அப்போது, ”தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. இனிமேல், போலீஸ்காரர்களையும், நடத்துநர்களையும் கூட விசில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுவார்கள்.
தவெக தலைவர் விஜய் யாரை கை காட்டுவாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினராக முடியும். தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் ஹீரோவாக விஜயே இருப்பார். எல்லார் கட்சி வீடுகளிலும் தவெகவுக்கான வாக்குகள் இருக்கிறது. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் விஜய். 10 கட்சி கூட்டணியையும், 8 கட்சிக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய ஒரே கட்சி தவெக தான். சாதி மதமற்ற ஒரு சமத்துவ சமூகத்தை தவெக அமைக்கும். விஜய் முதல்வர் ஆவதை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது. விசில் சின்னத்தை நாம் கவனமாக கையாள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்துப் பேசினார். அப்போது, செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்ற பாரதிதாசனின் பாடலை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், செந்தமிழைக் காக்கக்கூடிய ஒரே சேனை தமிழக வெற்றிக்கழகம் தான் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, தவெக தலைவர் மௌனமாக இருக்கிறார். ஆனால், எல்லோரும் அவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ”தவெக புதிய கட்சி, இளைஞர்கள் மட்டும் தான் இருக்கிறார். அது வெறும் ரசிகர் கூட்டம் மட்டும் தான் என திமுகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், இன்று 2,700 மாவட்ட, மாநகராட்சி செயலாளர்கள் கழகத்தின் செயல்வீரர்களாக இங்கு அமர்ந்திருக்கின்றனர்.
நீங்கள் சொல்வது போல இங்கு இருப்பவர்கள் தேர்தலுக்கு புதிதல்ல, திமுக அதிமுக செய்யும் தவறுகளை தெரிந்து கொண்டு தவெகவில் இருக்கிறார்கள். அதேசமயத்தில், திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளின் வீடுகளிலும் தவெகவினர் இருக்கின்றனர்.
திமுக அமைச்சர்கள் வீடுகளிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். அதிமுக அமைச்சர்கள் வீடுகளிலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். மேலும், விசிக தொண்டர்கள் தவெக வெற்றிக் கழகத்துக்கு மாறி விட்டார்கள். விசிகவில் திருமாவளவன் உட்பட வெறும் 20 பேர் இருக்கிறார்கள். திமுக விசிகவை அடியாளாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரியவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து 24 கட்சிகளை எதிர்த்து நிற்கின்றனர். திமுக 13 கட்சி கூட்டணியுடன் இருக்கிறது. அதிமுக 8 கட்சி கூட்டணியுடன் இருக்கிறது. ஆனால், விஜய் மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
75 வருடங்களில் அம்பேத்கரையும் பெரியாரையும் ஒன்றாக இணைத்த ஒரே கட்சி தவெக தான். பெரியார் குறித்துப் பேசும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் பெரியார் அம்பேத்கர் சிலை ஏன் இல்லை. இது குறித்து திருமாவளவன் ஏன் கேட்கவில்லை.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள், திருமா அண்ணன் ஆகியோர்கள் இணைந்து திமுக ஊழல் இல்லாத கட்சி, செந்தில் பாலாஜி ஊழல் இல்லாதவர் எனப் செய்தியாளர் சந்திப்பில் பேச பேச முடியுமா? எங்களைப்பற்றி, அடிக்கடி கொள்கை குறித்துப் பேசுகிறார்கள். செந்தில் பாலாஜி 2 நிமிடம் பெரியார் குறித்து மேடையில் பேசத்தெரியுமா?. ஸ்டாலினிடம்
எம்.ஜி.ஆர் கூட்டணிகளை நம்பி கட்சி உருவாக்கவில்லை.. தாய்க்குலங்களை நம்பி உருவாக்கினார். அதுபோலவே, தவெக தலைவர் விஜயும் தமிழக மக்களை நம்பி மட்டுமே கட்சியை உருவாக்கியிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் பேசுகையில், “ எனக்கு அழுத்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்களா? அழுத்தத்துக்கு அடங்கும் ஆளா நான். ஆனால், அழுத்தம் இல்லை என்று நான் சொல்லவில்லை. அழுத்தம் இருக்கிறது. அது நமக்கு அல்ல மக்களுக்கு. தமிழ்நாட்டை இது முன்னால் ஆண்டவர்களும் பாஜகவுக்கு அடிமையாக இருந்திருக்கிறார்கள். திமுக அவர்கள் மாதிரியாக தான் இருக்கிறார்கள். அவர்களாவது பரவாயில்லை நேரடியாக அடிமையாக இருக்கிறார்கள். ஆனால், திமுகவினர் மறைமுகமாக இருக்கிறார்கள். அதனால் தான், அவர்களின் வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான், தமிழக மக்கள் நம்மை நம்புகிறார்கள். நாம் புதிய கட்சி அவர்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என நம்மை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், அது பழக்கமானது தான். அதேசமயத்தில், தமிழக மக்கள் நம்மை சரியாக மதிப்பிடுகிறார்கள். அதனால் தான், உச்சத்தில் நம்மை தமிழக மக்கள் உச்சத்தில் வைத்திருக்கிறார்கள். யாரிடமும் அண்டிப்பிழைப்பதற்காகவோ, அடிமையாக இருப்பதற்காகவோ நான் அரசியல். என் மண்ணுக்கும் மக்களுக்கும் பிரச்னை ஏற்படும்போது அதை தடுக்கவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
நான் அரசியலுக்கு வரும்போது ஒரு ரூபாயில் கூட ஊழல் செய்யமாட்டேன். எனக்கு அந்த அவசியமும் கிடையாது. சினிமா பாணியில் நான் சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், எதற்கும் ஆசைபடாத ஒருவன் தவறுகள் நடக்கும்போது நிச்சயம் அதை தட்டிக் கேட்பான். அதேசமயத்தில், தமிழக மக்களுக்கு என்மீது மட்டும் நம்பிக்கை இருந்தால் மட்டும் பத்தாது, உங்கள் எல்லோர் மீதும் நம்பிக்கை வரவேண்டும். எனவே, ஒருங்கிணைந்து செயல்பட்டு நம்முடைய சின்னமான விசில் சின்னத்தில் மக்களை வாக்களிக்க வைக்க வேண்டும். நடக்கவிருப்பது வெறும் தேர்தல் அல்ல; இது ஜனநாயகப்போர். உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பது உண்மையானால், அதை தேர்தல் பணிகளில் காட்டுங்கள். நம்முடைய கொள்கைத் தலைவர்களுல் ஒருவரான வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுத்ததைப்போல, நாமும் தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்” எனத் தெரிவித்தார்.