கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், துயர சம்பவத்திற்கு பின்னால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.
கரூர் தவெக பரப்புரையில் ஏற்ப்பட்ட துயர சம்பவத்திற்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியிடம் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விஜய் பரப்புரையின்போது திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், காவல் துறையினர் அத்துமீறி தடியடி நடத்தியதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் தவெக சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, தவெகவின் ஆதவ் ஆர்ஜூனா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பரப்புரையில் செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசியபோதுதான், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கற்கள், செருப்புகள் வீசப்பட்டதாகவும் தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடக்கும் முன்பே மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்ததாக கூறியுள்ள ஆதவ் அர்ஜூனா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயின் கரூர் பரப்புரை தொடர்பாக தவெக சார்பில் இன்று தாக்கல் செய்யப்படும் மனுக்கள், அக்.3ஆம் தேதி விசாரணைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.