தமிழ்நாடு

சென்னையில் துணை நடிகையின் கணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை..!

Rasus

சென்னை அண்ணாநகரில் துணை நடிகையின் கணவர், வேலை செய்த அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் 26-ஆம் தேதி காலை, ஊழியர் ஒருவர் அலுவலகத்தை திறக்கச் சென்றார். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறைக்குள் கோபிநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த அவர், காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். விரைந்து சென்ற ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர், கோபிநாத்தின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார் இந்த கோபிநாத், எதற்காக அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற பல்வேறு கேள்விகள் காவல்துறை முன் எழத் தொடங்கியது. அதுகுறித்த விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்துக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். சினிமாவில் துணை நடிகையாக இருக்கும் இவர், டி.வி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். திருமண வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மூன்றாவது நபர் ஒருவரால் பிரச்னை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. கோபிநாத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே திருமணத்தை கடந்த உறவு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் தம்பதியருக்கு இடையே நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்க, இருவருக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

போதாக் குறைக்கு கடன் தொல்லை கோபிநாத்தை துரத்தியிருக்கிறது. பிரச்னைக்கு மேல் பிரச்னையாக நெருக்கடி தந்து கொண்டிருந்த சூழலில், வழக்கம்போல் கோபிநாத்துக்கும், ரேகாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அவர், 24-ஆம் தேதி மாலை அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அன்று இரவுதான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அலுவலகத்திற்கு மொத்தம் 3 சாவிகள் இருப்பதாகவும், அதில் ஒன்று கோபிநாத்திடம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைபயன்படுத்தி அலுவலகத்திற்குச் சென்ற அவர், வாழ்வின் இறுதி முடிவை தானே தேடிக் கொண்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோபிநாத்தின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதில் வேறு ஏதும் மர்மங்கள் அடங்கி இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது காவல்துறை.