தமிழ்நாடு

புழல் சிறை முதல்வகுப்பு சொகுசு வசதிகள் நிறுத்தம் !

புழல் சிறை முதல்வகுப்பு சொகுசு வசதிகள் நிறுத்தம் !

webteam

புழல் சிறையின் முதல்வகுப்பு அறைகளில் இருந்து 18 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் புழல் சிறையில் செல்போன்கள் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறைத்துறை டிஐஜி முருகேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல் வகுப்பு அறைகளில் உள்ள 18 டிவிக்களை பறிமுதல் செய்ய அவர் உத்தரவிட்டார். அத்துடன் 2 எப்.எம் ரேடியோக்களையும் பறிமுதல் செய்தார். முதல் வகுப்பு கைதிகளுக்கான சொகுசு வசதிகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ரசூலுதீன் என்பவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2017-ம் ஆண்டுமுதல் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் விதிகளை மீறி செயல்பட்டுள்ள இவரிடம் இருந்து கடந்த வாரம்தான் 3 செல்போன்கள் மற்றும் 2 சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில்தான், சிறையில் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்தபடி ரசுலுதீன் சுதந்திரமாக சுற்றித்திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். ரசூலுதீன் அறையில் இருந்த நட்சத்திர ஓட்டல் உணவு வகைகள் ரம்ஜான் பண்டிகைக்காக சிறப்பு அனுமதியின் பேரில் தரப்பட்டவை என்றும் இப்புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும் ஆய்வுக்குப்பின் அவர் விளக்கமளித்தார். இப்புகைப்படங்கள் எவ்வாறு சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சிறைத்துறை டிஐஜி முருகேசன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.