சிசுவுடன் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு  pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி | செவிலியர்கள் பிரசவம் பார்த்ததே காரணம் - சிசுவுடன் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் செவிலியர்களின் அலட்சியத்தால் சிசுவுடன் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ராஜன்

திண்டுகல்லை அடுத்த சிங்காரகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி, இவர் கேரள மாநிலத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜாகிரா (30) என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை கர்ப்பிணியாக இருந்த ஜாகிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.

அங்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில், செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, திடீரென கர்ப்பிணி பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு ஜாகிராவை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் உள்ள சிசுவுடன் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பெண் மற்றும் சிசு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்படுள்ளது. இது குறித்து பெண்ணின் சகோதரர் மற்றும் தாய் கூறும் போது... காலைல 6 மணிக்கு மருத்துவமனையில் சேர்த்தோம். அப்போது செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். திடீரென எனது மகள் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில் வயிற்றை பிடித்து செவிலியர்கள் அமுக்கினர்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுடன் குழந்தையும் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கும் நடைபெறக் கூடாது. உடனடியாக 3 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அழுதுகொண்டே கூறினர்.