தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு போடப்பட்டும், போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். உரிய அனுமதி பெறாமல் போராடுவதால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தடுத்தனர். அப்போது காவல்துறையினர் சார்பில் தடியடி நடத்தப்பட, நிலவரம் கலவரம் ஆனது. போராட்டக்காரர்களும் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மீது கல்வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். சில இடங்களில் அரசு மற்றும் காவல்துறை வாகனங்கள் தீக்கு இரையாகின. இதையடுத்து காவல்துறையினர் தரப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். பின்னர் அடுத்த நாள் ஒருவர் சுடப்பட்டார். சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். மொத்தம் 13 பேரு உயிரிழந்தனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்ததுடன், யார் சுடுவதற்கு உத்தரவிட்டது? என்று கேள்வியும் எழுப்பப்பட்டது.
சில நாட்கள் கழித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம் மற்றும் திரேஸ்புரம் காவல்நிலையம் சார்பாக வெளியிடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், சுட அனுமதி கொடுத்தது துணை வட்டாட்சியர்கள் சேகர் மற்றும் கண்ணன் ஆகியோர் தான் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழியின்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சுடப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் சந்தீப் தந்தூரி உத்தரவிட்டுள்ளார். துணை வட்டாட்சியர் கண்ணன் கயத்தாறுக்கும், சேகர் ஸ்ரீவைகுண்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.