தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூபாய் 10 லட்சமும் வழங்கக் கோரி கந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் அன்றைய தினத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.