தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து

Rasus

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். அந்த விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தமிழக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக வழக்கமாக சிபிஐ போலீசார் தான் விசாரிப்பார்கள். சிபிஐ விசாரணை சரியாக இருக்கும் என நீங்கள் கருதினால் ஏன் சிபிஐ விசாரணையை அணுகக் கூடாது என மனுதாரரை கேள்வி எழுப்பினார். அப்போது சிபிஐ மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என மனுதாரர் தெரிவித்தார். எனவே இதுதொடர்பாக ஒருவாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.