தமிழ்நாடு

''நேரம் பிந்தி வந்துட்டேன்.. மன்னிப்பு கேட்டு சந்தித்த நடிகர் விஜய்

''நேரம் பிந்தி வந்துட்டேன்.. மன்னிப்பு கேட்டு சந்தித்த நடிகர் விஜய்

Rasus

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். அப்போது புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் மிகவும் எளிமையாக விஜய் நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜயும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளார். பகலில் சென்றால் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் விஜய். இதனிடையே துப்ப‌க்கிச்சூட்டில் ‌காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ‌இன்று சந்தித்து விஜய் நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “ மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டப்படி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்.  ‘நேரம் பிந்தி வந்தேம்மா’ அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என தெரிவித்தனர்.