தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் சிபிசிஐடி காவல்துறையினர், வீட்டுச் சுவரில் பதிந்த 2 தோட்டாக்களை கண்டறிந்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியறுத்தி கடந்த மாதம் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிபிசிஐடி காவல்துறையினர் தூத்துக்குடியில் தடயவியல் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த அண்ணாநகரில் சுமார் 7 மணி நேரம் அவர்கள் தடயவியல் சோதனை நடத்தினர். அப்போது அண்ணாநகர் ஆறாவது தெருவில் உள்ள ராமசாமி என்பவர் வீட்டின் மாடியிலும், சுவரிலும் 2 துப்பாக்கி தோட்டாக்கள் பதிந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் தோட்டாக்களை சுவரிலிருந்து சிபிசிஐடி காவல்துறையினர் அகற்றினர்.