தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை - மாவட்ட ஆட்சியர்

webteam

தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நடைபெற்ற மோதலில், 13 காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து நேற்று தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடியின் புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும் முதல் பணியாக, மருத்துவமனையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சென்று சந்தீப் சந்தித்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள அம்மா உணவகம் மீண்டும் திறக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவு வழங்கப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு தரப்பினரை சந்தித்து, ஆலோசித்து வருகிறோம். தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும். மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களில் ரூ.1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான வாகனங்கள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயம், 83 பேர் லேசான காயமடைந்துள்ளனர். தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான்” என்று தெரிவித்தார்.