ttv dinakaran, kamaraj x page
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு ஆதரவு.. அமமுக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்.. டிடிவி தினகரன் அதிரடி!

சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இருக்கையில் அமரவைத்தனர்.

Prakash J

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அமமுக காமராஜ் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று கூடிய சட்டசபையில், சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இருக்கையில் அமரவைத்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், அமுமுக சார்பில் வெற்றிபெற்ற காமராஜ் எம்.எல்.ஏ., புதிய ஆட்சியைப் பற்றி பெருமையுடன் பேசினார். மேலும், பெரும்பான்மைக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய காமராஜ் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது. எஸ்.காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும். கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ். காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பெரும்பான்மைக்கான பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது காமராஜ், தவெகவை ஆதரித்து கடிதம் கொடுத்ததாகத் தகவல் வெளியானது. அந்த கடிதம் போலி என டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். அந்த கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை என்று காமராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காமராஜ், ‘கடந்த 10 ஆண்டுகாலமாக அமமுகவிற்கு உழைத்தேன். அதற்குக் கிடைத்த பரிசாக கட்சியிலிருந்து நீக்கத்தை எடுத்துக்கொள்கிறேன். தலைமை முடிவு எடுக்கும்போது கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதில் ஒன்றும் வருத்தமில்லை. சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பேன். சட்டமன்றத்தில் முதல்வரைப் புகழ்ந்து பேசுவது தவறா’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.