எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் pt
தமிழ்நாடு

'பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது.. நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள்' - டிடிவி தினகரன் பேச்சு

மதுராந்தகத்தில் நடந்துவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன், அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேசினார். அப்போது பங்காளி சண்டை தீர்ந்துவிட்டது என தெரிவித்தார்.

Rishan Vengai

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் அமமுகவும் அதிமுகவும் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பங்காளி சண்டை முடிந்துவிட்டதாகவும், அம்மாவின் தொண்டர்களாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, எந்த அழுத்தமும் இன்றி NDA கூட்டணியில் இணைந்ததாகவும் கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

டிடிவி தினகரன்,எடப்பாடி பழனிசாமி

கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இருந்துவரும் அதிமுக-பாஜக, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அன்புமணி தலைமையிலான பாமகவையும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவையும் கூட்டணிக்குள் இழுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் எந்த கூட்டணியிலும் சேர மாட்டோம் என சூளுரைத்த டிடிவி தினகரன், இறுதியில் அதே தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே ஐக்கியமாகியுள்ளார்.

இந்தசூழலில் தான் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. இப்பொதுக்கூட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்த நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில், பிரதமர் மோடிக்கு பச்சைத் துண்டு, ஏலக்காய் மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி கௌரவித்தார்.

பங்காளி சண்டை முடிந்துவிட்டது..

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பரப்புரை பொதுக்கூட்ட மேடையில் அனைவரையும் வரவேற்று பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி அவர்களே என எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் கூறி வரவேற்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான்.. ஆனால் பங்காளி சண்டை முடிந்துவிட்டது. நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்.. எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்.. ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அமமுகவின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று எங்கள் மனதிலே இருந்த கோப தாபங்களை விட்டுவிட்டு எந்த அழுத்தமும் இன்றி இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொண்டோம்.

எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக NDA கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிகொள்கிறேன்” என பேசினார்.

தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார்..