இபிஎஸ், டிடிவி தினகரன் x page
தமிழ்நாடு

”எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமமானது..” - டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமமானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

Rishan Vengai

நாளுக்குநாள் தமிழக அரசியல் களம் மிக வேகமாகச் சூடு பிடிக்கிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதை தொடர்ந்து, அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் உறவை முறித்துக்கொண்டு வெளியேறினார்.

டிடிவி தினகரன்

கூட்டணி முறிவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தினின் செயல்களை குற்றஞ்சாட்டி பேசியிருந்த டிடிவி தினகரன், தற்போது முதலமைச்சர் வேட்பாளரிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றாத வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியாது..

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எனக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பகையும் இல்லை. பாஜகவின் பாதுகாப்பில்தான் பழனிசாமி இருந்தார், பழனிசாமியை நாங்கள் முதல்வராக்கினோம். தற்போது பிரச்னையே அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக போக முடியாது என்பது தான்.

எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது தற்கொலைக்கு சமமானது. ஆகவே முதலமைச்சர் வேட்பாளரிலிருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்றாத வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரப்போவதில்லை. அண்ணா திமுக என்ற கட்சியே கிடையாது. தற்போது இருப்பது எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம். அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ ஓட்டு கேட்பேன் என எங்கும் நான் கூறவில்லை. பழனிசாமி முகம் வாடியுள்ளது, அவரை விட்டுவிடுங்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு அப்போது இல்லை, சசிகலா கூறியதால் தேர்தலில் போட்டியிட்டேன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகளில் நான் யாருடனும் தொடர்பில் இல்லை. டிசம்பர் மாதம் மகிழ்ச்சியான செய்தி வரும், அமமுக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் கூட்டணியாக இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்” என்று பேசினார்.

அண்ணாமலை குறித்து பேசிய டிடிவி தினகரன், “அண்ணாமலை என்னுடைய நல்ல நண்பர். நாங்க இரண்டுபேரும் அரசியலில் பழகியிருந்தாலும்கூட, இரண்டு பேரின் குணாதிசயங்கள் ஒத்துப்போகும்.

அண்ணாமலை யதார்த்தத்தையும், உண்மையையும் பேசக்கூடியவர். அவர் என்னிடம் அரசியல்வாதியாகவே பழகியதில்லை. நானும் அப்படித்தான்.

கூட்டணியிலிருந்து விலகிய முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அண்ணாமலை தொடர்ச்சியாகவே என்னிடம் வலியுறுத்தினார்.

அண்ணாமலையும் நானும் 9-ஆம் தேதி டெல்லிக்கு செல்வதாக இருந்தது. ஆனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாக அது தள்ளிப்போனது” என்று பேசினார்.