தமிழ்நாடு

“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்

“பழனிசாமி நயவஞ்சகம் நிறைவேறப் போவதில்லை.” - டிடிவி தினகரன்

webteam

தேர்தல் முடியும் வரை எட்டு வழிச்சாலை பற்றி வாய் திறக்காமல் இருந்துவிட்டு தற்போது மக்களை மிரட்டும் தொனியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “8 வழிச்சாலை பற்றி தேர்தல் முடியும் வரை வாய்த் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது ‘ மக்களுக்கு உயிர் முக்கியம் ; அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்’ என்று திடீரென மிரட்டும் தொனியில் வசனம் பேசியிருக்கிறார் பழனிசாமி. இதுதான் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களின் உண்மை முகம்.

சோறு போடுகின்ற விவசாய நிலங்களையும், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் அழித்து, கார்பரேட் முதலாளிகளின் நலனுக்காக  8 வழிச்சாலை போட துடிக்கின்ற பழனிசாமியின்  நயவஞ்சகம் நிச்சயம் நிறைவேறப் போவதில்லை. இவர்களுக்கு மக்கள் எழுதியுள்ள முடிவுரை மே 23 ஆம் தேதி தெரிந்துவிடும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி எட்டு வழிச்சாலை தொடர்பாக கருத்து தெரிவித்தார். அப்போது “சாலைகள் இன்றி எங்கு செல்ல முடியும். திமுக ஆட்சியில் 886 கிலோ மீட்டர் சாலைகள் அமைத்தார்கள். அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா ? 

அந்ததந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் சாலைகள் அமைத்துதான் ஆக வேண்டும். அதன்மூலம்தான் விபத்தை குறைக்க முடியும். குறைந்த நேரத்தில் பயணம் செய்யமுடியும். தொழில்வளம் பெற வேண்டுமென்றாலும் சாலைகள் மிக அவசியம். ஒரு லட்சம் வாகனங்கள் சென்ற சாலையில் இன்று 4 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. புதிய சாலைகள் அமைத்தால் தான் விபத்துகளை தவிர்க்க முடியும். பயிர்களை உருவாக்க முடியும், உயிர்கள் போனால் வராது” என்றார்.