அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் ராயப்பேட்டை வெஸ்ட் கார்ட் சாலையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்துவைத்தார். இந்த இடம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் நாடாளுமன்ற வேட்பாளராக இருந்த பிரிஸ்ட் பல்கலைக்கழக சேர்மன் முருகேசனுக்கு சொந்தமான இடமாகும். இந்த நிகழ்ச்சியில் அமமுகவைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “2019 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை பாடமாக எடுத்து உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களை அமமுக கைப்பற்றி உள்ளது. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்” என்றார்.
மேலும், ‘நான் முதல்வர் அல்ல’ என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு டிடிவி தினகரன், “ரஜினியின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. பெரியார் ஆட்சி அதிகாரம் மீது பற்றில்லாமல், சமூக நீதி, சமத்துவத்தை முன்வைத்து அரசியல் களம் கண்டார். ஆனால் அண்ணா ஆட்சி அதிகாரம் தான் இலக்கு என்று கட்சி தொடங்கி வெற்றி பெற்றார்” என கூறினார்.
அத்துடன், “திமுகவில் கருணாநிதியை MK என்று சொல்வார்கள், ஆனால் இன்று PK என்று ஒருவர் வந்துள்ளார், எங்களிடம் மாவட்டத்திற்கு 5 PK இருக்கிறார்கள் அவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.