டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“பெயருக்கேற்ப சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் ஸ்டாலின்” - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

webteam

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனி பங்களாமேட்டில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி மக்களவை உறுப்பினர் ஓபி.ரவீந்திரநாத்தும் பங்கேற்றனர்.

தேனி பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்

அப்போது மேடையில் டிடிவி தினகரன் பேசியபோது,

“காலத்தின் சதியால் நாங்கள் (ஓபிஎஸ் - டிடிவி தினகரன்) பிரிந்தோம்” - டிடிவி தினகரன்

“நான் மிகவும் நேசிக்கும் தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அதுவும் எனது அருமை நண்பர் ஓ.பி.எஸ் உடன் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவை கபளிகரம் செய்து வருபவர்களிடம் இருந்து மீட்கவே நாங்கள் ஒன்றிணைந்தோம். நானும் ஒ.பி.எஸ்-ம் சொன்னதை செய்வோம். காலத்தின் சதியால் நாங்கள் இருவரும் பிரிந்தோம். இன்று அம்மா என்ற மையப்புள்ளியில் ஒருங்கிணைந்துள்ளோம்.

நான் பிறந்த மண் தஞ்சை என்றால், அரசியலில் நான் பிறந்த மண் தேனி. தேன் போல் இனிக்கும். தேனி மாவட்டத்தில் எப்போது போட்டியிட வேண்டும் என எனக்குத் தெரியும். என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்”

“தன்னை சர்வாதிகாரியாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் ஸ்டாலின்” - டிடிவி தினகரன்

“திமுக மீது தமிழ்நாடு முழுவதும் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் என தினமும் போராட்டம் நடக்கிறது. கருணாநிதி எதை நினைத்து ஸ்டாலின் என பெயர் வைத்தாரோ தன்னை சர்வாதிகாரியாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார் ஸ்டாலின்.

டிடிவி தினகரன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை தமிழகம் முழுவதும் தோல்வி அடையச் செய்ய வேண்டும். ஆண்டவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் இந்த தேர்தல் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்பதை சூசகமாக கூறுகிறேன். ஊழல் முறைகேட்டால் ஈட்டிய செல்வத்தால் நிர்வாகிகளை ஈர்த்து வைத்திருக்கிறார் பழனிசாமி”

“நீராதார பிரச்னைகளில் திமுக குரல் கொடுக்கவில்லை” - டிடிவி தினகரன்

“காவிரி நதி நீர் பிரச்சனையில் திமுக உரிய தீர்வு காணவில்லை. அதே போல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தீர்வு காணவில்லை. கர்நாடகாவில் மேகதாது அணை, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என தமிழகத்தின் நீராதார பிரச்னைகளில் திமுகவின் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவும் பிரச்னைகளில் திமுக எம்.பிக்கள் குரல் கொடுக்கவில்லை”

cm stalin

“மங்காத்தா படம் போல நாடகம்...” - டிடிவி தினகரன்

“எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் மறைமுக கூட்டணி. அதனால்தான் சட்டசபையில் ஓ.பி.எஸ் இருக்கை மாற்றம். நானும் ஓ.பி.எஸ்-ம் இணைந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இருவரும் அஜித் நடித்த மங்காத்தா படம் போல உள்ளே வெளியே என நாடகம் ஆடி வருகிறார்கள். அது எங்களிடம் நடக்காது. வரும் தேர்தலில் திமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்” என்று பேசினார்.