டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் கோப்புப்படம்
தமிழ்நாடு

“இந்தியப் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும்” - டிடிவி தினகரன் சூசகம்

webteam

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வதுதான் நாகரிகம். ஆகவே அதன் பின் சொல்கிறேன். கூட்டணியில் போட்டியிடுவோம் அல்லது தனித்துப் போட்டியிடுவோம். எப்படி இருப்பினும் உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பாஜகவிடனரிடம்தான் கேட்க வேண்டும்.
admk vs bjp

தேர்தல் வெற்றி தோல்வியெல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக ஓபிஎஸ் உடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். இது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். என்னுடைய பார்வையில் அதிமுக இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது.

கவர்னர், அந்தப் பதவிக்கும் பதவியின் மாண்புக்கும் இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது. அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம். பழனிசாமியோடு சேர்ந்து பயணிக்க வாய்ப்பில்லை. காரணம் அதில் அமமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனக்குமே விருப்பம் இல்லை. அதிமுக இணைப்பு குறித்து அவர்கள் எதன் அடிப்படையில் சொல்கிறார்கள் என தெரியவில்லை.

இபிஎஸ்

அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக எங்களை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், அது நடக்கும். அமமுக கட்சி எதற்கு தொடங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும். தொண்டர்களின் விருப்பம் நிர்வாகிகளின் விருப்பத்தை மீறி எந்த முடிவையும் கட்சி எடுக்க முடியாது. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு கிடையாது.

கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய பெரிய ஆட்கள் எங்கள் கட்சியை விட்டு போனாலும் அதைவிட அந்தப் பகுதியில் இயக்கம் வலுவாகத்தான் உள்ளது. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களோடு ஆயிரம் பேர் வெளியில் சென்றாலும் 2,000 பேர் உள்ளே புதிதாக வருகிறார்கள். புதிய நிர்வாகிகள் இணைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமில்லை. எங்கள் நிர்வாகிகளும் எனது நண்பர்களும் தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டுமென்று சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறேன். அது தொடர்பாக முடிவெடுத்தால் நிச்சயமாக வெளியில் செல்வேன்.

jayalalitha

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், கூட்டணி உறுதியான பிறகுதான் நாங்கள் அதை சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். இல்லாதபட்சத்தில் அமமுக தனித்து போட்டியிடும். நாங்கள் யாருக்கும் அடிபணிந்து செல்கின்ற இயக்கம் கிடையாது. அம்மாவின் கொள்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இயக்கம். அமமுக உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைக்கும் வரை நானும் என்னுடன் பணியாற்றும் அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிலிருந்து மாற மாட்டோம்.

தேனி தொகுதியில் போட்டியிடுவேன் என எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னும் அது குறித்தான முடிவெடுக்கவில்லை. அப்படி வந்தால் அதனை மதுரையில் வைத்து அறிவிப்பேன். மத்தியில் யார் பிரதமர் என்பதன் அடிப்படையில்தான் இந்த தேர்தல் முடிவு இருக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியைதான் நாங்கள் மேற்கொள்வோம்.

ramar temple

ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிகமான விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விருப்பமாக இருந்தார்கள். ஆகவே கட்டப்பட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில்தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியான விஷயம்.

இந்தியாவில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்ட முடியும் என அம்மா கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

ராமர்கோவில் வட இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார்கள். தமிழகத்தில் ராமர் கோவில் விவாகாரம் எப்படி இருக்கும் என்பது தேர்தலுக்குப் பின்புதான் தெரியவரும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளின் பலமும் தெரிந்துவிடும். பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.