திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கதவின் பூட்டை உடைத்து வேட்புமனுக்களை திருட முயற்சித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வடகண்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களுக்காக 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் உதவி அலுவலர் சிங்காரவேலன் வேட்பு மனுக்களை பெற்றிருந்த நிலையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் அலுவலகத்தைப் பூட்டியுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உள்பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், அலுவலகத்துக்கு வெளியே சற்று தொலைவில் சிதறிக் கிடந்தன. தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வரும் ஊராட்சி மன்றக் கதவு உடைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.