சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ள போதிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபாநாயகர் தனபால் நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவையை கூட்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஜமாலுதீன் குறிப்பிட்டுள்ளார். சட்டப் பேரவை கூடியதும், அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். இந்தத் தீர்மானம் வழிமொழியப்பட்டு அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே நடைபெறும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்பதால் குரல் வாக்கெடுப்புக்குப் பதிலாக எண்ணிக் கணிக்கும் முறையே பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.