திருத்தணி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் இறந்தே பிறந்த பச்சிளங்குழந்தை. உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பநாதன். இவரது மனைவி செம்பருத்தி. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில், தற்போது நிறைமாத கர்ப்பிணியான செம்பருத்தியை கடந்த 6-ந் தேதி பிரசவத்திற்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவம் பார்க்க ஏதுவாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு நரம்பு ஊசி போடும் மருத்துவர் வருவதாக சொல்லி 3 நாட்களாக வராததால் கர்ப்பிணிப் பெண் சாப்பிடாமல் காத்திருந்து பிறகு சாப்பிட சொல்லியதாகக் கூறப்படுகிறது.
இது போன்று 3 நாட்களும் நிறைமாத கர்ப்பிணிக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் செம்பருத்திக்கு இன்று பிறந்த குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினருக்கும், செம்பருத்தியின் உறவினர்களுக்குமிடையே வாக்குவாதம் தொடர்ந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது. முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்தே பிறந்ததாக தலைமை மருத்துவர் ஆனந்தகுமாரிடம் செம்பருத்தியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.